நாடளாவிய ரீதியில் துக்க தினத்தை பிரகடனப்படுத்திய ரணில்!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என சிறிலங்காவின் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் மகாராணிக்கு மௌன அஞ்சலி
அத்துடன், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 9.30 க்கு ஆரம்பமான நிலையில் சிறிலங்கா பிரதமர் தினேஸ் குணவர்த்தன இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டு கொண்டதற்கிணங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இரங்கல் வெளியிட்ட ரணில்
இதேவேளை, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் பிரித்தானிய மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.