குஜராத்தில் பேரனர்த்தம் -கேபிள் பாலம் அறுந்து வீழ்ந்து பலர் பலி -மீட்பு பணிகள் தீவிரம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 68 பேர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை வழக்கம்போல் கேபிள் பாலத்தில் சுமார் 500 பேருக்கும் அதிகமானவர்கள் சென்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கியது.
திடீரென அறுந்து விழுந்த பாலத்தால் ஏற்பட்ட அவலம்
இதனால் ஆற்று தண்ணீரில் பலர் மூழ்கினர். இதில் பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர். ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இன்னும் சிலர் அறுந்து தொங்கிய பாலத்தின்பகுதியில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார்கள்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் என அனைவரும் திரண்டு வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நான்கு நாட்களுக்கு முன்பே திறப்பு
அறுந்து விழுந்த பாலம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பாலம் நீண்ட பாரம்பரியமிக்கது. வரலாற்று பாரம்பரியமிக்க இந்த பாலம் சமீபத்தில் பழுதடைந்தது. இதனால் பாலத்தை புனரமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த பணியை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
குஜராத் புத்தாண்டு கடந்த 26ம் திகதி கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டின்போது மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.
பாலம் புனரமைக்கப்பட்டு நான்கு நாட்களில் அறுந்து வீழ்ந்துள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
