இந்தியாவுடனான டிஜிட்டல் அடையாள அட்டை ஒப்பந்தத்திற்கு எதிராக பாய்ந்த வழக்கு
இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் மற்றும் 27 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்
ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இலங்கை குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு உள்ளிட்ட தகவல்கள் இந்தியாவிற்கு மாற்றப்படும் என்றும், இது இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
