பாடசாலை மாணவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்
கண்டி - ஹசலக 7 எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், சிறுவர்கள் பலர் நேற்று (19) தங்கள் வீடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் இந்த ரவைகளைக் கண்டுள்ளார்.
பின்னர் குறித்த சிறுவன் தனது நண்பர்களுக்கும் ரவைகளை வழங்கியுள்ள நிலையில் ஒரு சிறுவன் வீட்டிற்குச் சென்ற பிறகு தனக்குக் கிடைத்த ரவையை அடுப்பில் போட்டுள்ளார்.
காவல்துறையினர் சோதனை
இதன் போது தோட்டா வெடித்துள்ள நிலையில், வீட்டு உரிமையாளர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வருகைதந்து வெடிப்பு நடந்த வீட்டை ஆய்வு செய்ததுடன் அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.
பின்னர், ஏனைய சிறுவர்களின் வீடுகளையும் சோதனை செய்தபோது, இந்த ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 ரவைகள் மீட்பு
குறித்த ரவைகளை முதலில் கண்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது வீட்டிற்கு அடுத்துள்ள மற்றொரு வீட்டில் உள்ள விறகு மடுவத்தில் இருந்து கண்டெடுத்ததாக குறிப்பிட்டார்.
இதேவேளை சிறுவர்களிடம் இருந்து சுமார் 30 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் ஹசலக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
