உத்தரவை மீறி பயணித்த உந்துருளி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு
பொலாகம, கொட்டகம சந்தியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை - ஹிரிவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொட்டகம சந்தியில் சோதனை கடமையில் இருந்த காவல்துறையினர், வீதியில் பயணித்த உந்துருளியொன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
எனினும், உத்தரவை மீறி உந்துருளி ஓட்டுநர் பயணித்ததால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் குறித்த நபரின் இடது கை மற்றும் இடது காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
