நைஜீரியாவில் ஆயுததாரிகள் வெறியாட்டம் - பெருமளவு மக்கள் கொன்று குவிப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் புகுந்த ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 53 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
வடமேற்கு மாகாணம் ஷாம்பாராவின் சுர்மி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்குள்ளேயே நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர்.
பின்னர் அந்த கிராமத்தில் இருந்த கால்நடை பண்ணை மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளை கடத்தி சென்றனர். அதுமட்டுமின்றி செல்லும் வழியில் இதேபோல் 5 கிராமங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நைஜீரியாவில் போஹோஹாரம் என்ற அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.