ஐ.நா பொதுச் செயலரை கடுமையாக விமர்சித்த இஸ்ரேலிய அமைச்சர்
உலக அமைதியை வலியுறுத்தும் ஐநா போன்ற அமைப்பின் தலைவர் பதவியில் இருக்க அன்டோனியோ குட்டெரெஸிற்கு தகுதியில்லை என இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார்.
ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது குறித்து ஐ.நா சபையில் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருப்பவர்களின் நிலையை அறிந்துகொள்ள ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிணைக் கைதிகளை அடைந்து வைத்திருக்கும் இடத்தை சென்று பார்வையிட வலியுறுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடுமையாக விமர்சித்தார்
இந்த கலந்துரையாடலில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், உலக சுகாதார அமைப்பு, பிணைக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனும் கலந்து கொண்டிருந்தார்.
கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எலி கோஹன் ஐ.நா பொதுச் செயலாளரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஹமாஸ் அமைப்பினர் கொடூரமானவர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் அவர்களிடமிருந்து காசாவை விடுவிக்க வேண்டும் என சுதந்திர நாடுகள் கூறுகின்ற போதிலும் இவர் அமைதி காக்கிறார் என அவர் தெரிவித்தார்.
இவர் தனது நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாமல் இருப்பது தவறு எனவும் அவர் சாடினார்.
ஹமாஸின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலினை இஸ்ரேல் நடத்தியதில் 11,000 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்காக குரல் கொடுத்த ஐ . நா செயலாளர் இஸ்ரேலின் விடயத்தில் மௌனம் காக்கிறார்.
ஈரானுடன் நெருக்கமான உறவு
ஆனால் , போரை தொடங்கிய ஹமாஸ், 1,200 இஸ்ரேலியர்களைக் கொன்று, குழந்தைகள், முதியவர்கள் உட்பட 240 பேரை பிணைக்கைதிகளாக இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடித்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எதிராக இதுவரை எந்த கண்டனத்தையும் அவர் பதிவு செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.
ஈரானுடன் அவருக்கு இருக்கும் மிக நெருக்கமான உறவு காரணமாகவே உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய ஐ.நா வின் பொதுச் செயலாளர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட ஒருவர் ஐ. நாவின் பொதுச்செயலாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். இதனால் அவர் உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.