தமிழர் பிரதேசத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகங்கள்
மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து காவல் நிலையம் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்று(02) கடுமையான தாக்குதல் மேற்கொண்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறையினர், மன்னார் பள்ளிமுனை கிராமத்திற்கு நேற்று முன் தினம்(01) திங்கட்கிழமை மாலை சென்று பிரிதொரு நபரின் பெயரை கூறி பிரதீபனை விசாரித்துள்ளனர்.
இதன் போது குறித்த வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் (வயது-42) என்ற குடும்பஸ்தர் இருந்துள்ளார்.
காவல்துறை
அங்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரை கேட்ட போது அவர் இல்லையென பிரதீபன் தெரிவித்துள்ளார்.
உடனடியாக பிரதீபனின் இரு கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினர் பறித்ததோடு அவருடைய மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு மன்னார் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பிரதீபன் நேற்றைய தினம்(02) மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து அங்குள்ள அதிகாரிகள் மன்னார் காவல்நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
கூரிய ஆயுதம்
இதையடுத்து குறித்த குடும்பஸ்தர் மன்னார் காவல்நிலையம் நிலையம் சென்ற போது மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
பிரதீபன் ஆவணங்களை காவல்துறையினருக்கு வழங்கியதையடுத்து கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை கேட்டபோது மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி கூரிய ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியதாக பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது மக்கள் மற்றும் ஏனைய காவல்துறையினர் பார்த்துக் கொண்டு இருந்ததோடு அவர் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டார்.
மனித உரிமைகள்
என்னிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை அத்தோடு என்னிடம் பறித்த பொருட்களையும் தரவில்லை.
என்னை செல்ல காவல்நிலையத்தை விட்டு செல்ல சொன்னதையடுத்து நான் வைத்தியசாலைக்கு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த குடும்பஸ்தர் மன்னார் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது மனைவி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |