இலக்கு வைக்கப்பட்ட துசித ஹல்லொலுவ: வெடித்தது புதிய சர்ச்சை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் மக்கள் தொடர்பு இயக்குநரும் லொத்தர் சபையின் முன்னாள் பிரதி இயக்குநருமான துசித ஹல்லொலுவ மீதான துப்பாக்கிச் சூட்டு விசாரணை தொடர்பில் காவல்துறையினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை மாற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்று (17) துசித ஹல்லொலுவ தனது வழக்கறிஞருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்ததாகவும், முதலில் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் கார் நின்றதும் முன்பக்க கண்ணாடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து துப்பாகிச் சூடு நடத்தியவர்களால் தானும் தனது வழக்கறிஞரும் தாக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஹல்லொலுவ கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வு விசாரணை
அத்துடன், துப்பாக்கிதாரிகள் தனது வாகனத்திலிருந்த முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்பை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து, துசித ஹல்லொலுவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹல்லொலுவவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நேரத்தில், அவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
