பணயக் கைதிகள் தொடர்பில் ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தம்மால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக்கைதிகளில் 50 பேர் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் இந்த அறிவிப்பு பயணக்கைதிகளின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா வியாழன் அன்று டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
இஸ்ரேலிய விமான தாக்குதலின் விளைவாக
"சியோனிச குண்டுவீச்சு மற்றும் படுகொலைகளின் விளைவாக காசா பகுதியில் கொல்லப்பட்ட சியோனிஸ்ட் கைதிகளின் எண்ணிக்கை சுமாராக 50 பேரை எட்டியதாக அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் மதிப்பிடுகிறது" என்று டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், ஹமாஸ் இது தொடர்பாக முன்னரும் தெரிவித்திருந்தது. அதாவது தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட ஒன்பது பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாகக் கூறியது.
தூக்கிலிடப்பட்ட கைதிகள்
இதேவேளை கைதிகள் ஹமாஸால் தூக்கிலிடப்பட்டதாக அல் ஜசீராவின் அறிக்கை குறிப்பிட்டது. ஹமாஸ் இராணுவ கட்டடங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்தும் குண்டுவீச்சுக்கு பழிவாங்கும் வகையில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஹமாஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.