இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது!
இரத்மலானை - ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் (8) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த இருமாடி வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டிருந்த நிலையில் அவற்றில் ஒன்று வெடித்துச் சிதறியதுடன், மற்றைய குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
நான்கு சந்தேகநபர்கள் கைது
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கல்கிஸை காவல் நிலையத்தினர், மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையே நிலவும் தகராறே இத்தாக்குதலுக்கு காரணம் என்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த கைக்குண்டுத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |