ஹிருணிகாவின் சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு: நீதிபதிகள் குழு நியமனம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பை வழங்குவதில் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, குறித்த மேன்முறையீடு இன்று (11.11.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடூழிய சிறைத்தண்டனை
இதன்போது, மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய, பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த மேன்முறையீட்டை எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி இளைஞர் ஒருவரை டிபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்திருந்தது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து, குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதியாக விடுதலை செய்யுமாறு கோரியே ஹிருணிகா இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |