சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (9) நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான 50 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
நாடாளுமன்ற வழிமுறைகளைக் கையாளும்போது சபாநாயகர் பின்பற்றிய ஒருபக்கச்சார்பான மற்றும் ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடுகள் காரணமாக, அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் குற்றஞ்சாட்டியே எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான வேதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |