ஐரோப்பாவுக்கு அச்சுருத்தலாக மாறியுள்ள ஹன்டா வைரஸ்
அண்டார்க்டிக் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட MV ஹோண்டியஸ் (Hondius) என்ற சொகுசு எக்ஸ்பெடிஷன் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய குடிமக்களை மீட்க ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பியுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் விளக்கியுள்ளன.
கடந்த ஏப்ரல் 1 அன்று அர்ஜென்டினாவின் உஷுவையா துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பலில் சுமார் 200 பயணிகள் மற்றும் குழுவினர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத்தின்போது சில நோய் அறிகுறிகளுடன் தொடங்கிய இந்த தொற்று பின்னர் கடுமையான சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று பேர் உயிரிழப்பு
இந்நிலையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒரு டச்சு தம்பதியரும், ஒரு ஜெர்மன் குடிமகனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் தற்போது கேனரி தீவுகளின் டெனரிஃப் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 10) அதிகாலையில் கப்பல் டெனரிஃப் அருகே நங்கூரமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பெயின் அரசு மிக உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணிகளை வெளியேற்றத் தயாராகி வருகிறது.
வீட்டுத் தனிமைப்படுத்தல்
பயணிகள் சிறிய படகுகள் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உடனடியாக தனித் தனி விமானங்களில் ஏற்றப்படுவார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் குடிமக்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்ற பின்னர் 42 முதல் 45 நாட்கள் வரை வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த பரவல் பொது மக்களுக்கு குறைந்த அபாயம் கொண்டது என்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |