ஹரிஹரன் இசை நிகழ்ச்சி: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நோர்தன்யுனி!
“ யாழில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்.” என NORTHERNUNI இன் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலட்சக்கணக்கான இரசிகப் பெருமக்களைத் தாண்டி வெகுவிமரிசையாக NORTHERNUNI இன் ஒருங்கமைப்பில் அரங்கேறிய ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டம் பெரும் குழப்பத்தில் முடிந்தது.
அதற்கு விளக்கமளிக்கும் வகையில் NORTHERNUNI இன் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி தென்னிந்நிய பாடகர் ஹரிஹரன் மற்றும் தென்னிந்திய கலைஞர்களால் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹரிஹரன் இசை நிகழ்ச்சி
எனினும் அளவுக்குமீறிய சனநெரிசலால் இசை நிகழ்ச்சியில் தடங்கல் ஏற்பட்டதுடன் நிகழ்ச்சியும் சிறிது நேரம் தடைப்பட்டது. எனவே குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி பெரிதும் விமர்சனத்திற்குள்ளாகியது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,
“சில விசமிகளால் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம். எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன்.
தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை - 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |