ட்ரம்பை அதிர வைத்த ஹார்வர்ட் பல்கலை நிர்வாகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த 2.2 பில்லியன் டொலர் நிதியுதவியை ட்ரம்ப் நிறுத்தினார்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மாசசூசெட்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
டிரம்ப் இடையிலான மோதல்
இந்த வழக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், "நிதி உதவியை நிறுத்தியது சட்டவிரோதமானது.
இது அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறிய செயல். எனவே, இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்“ என்றார்.
அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மற்ற பல்கலைக்கழகங்களின் பெயர்களும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யூத விரோத செயல்பாடுகள்
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
யூத விரோத செயற்பாடுகள் கொண்டதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது என்று ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது. இதைத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய 2.2 பில்லியன் டொலர் நிதி உதவியை நிறுத்தி வைத்தார்.
மோதல் உச்சமடைந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
