ஹசன் நஸ்ரல்லா படுகொலை : உறுதிப்படுத்தியது ஹிஸ்புல்லா
புதிய இணைப்பு
தமது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.அவர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இறந்துவிட்டார் என்று குழு உறுதிப்படுத்தியது, "தெற்கு புறநகர்ப் பகுதியில் துரோகத்தனமான சியோனிசத் தாக்குதலைத் தொடர்ந்து" அவரது மரணம் நிகழ்ந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நஸ்ரல்லாவை ஒரு தியாகி என்று விபரித்த ஹிஸ்புல்லா,இஸ்ரேலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah) இலக்குவைத்தே பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டின் (Beirut) தாஹியில் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் நேற்று (27.09.2024) பயங்கர தாக்குதலை நடத்தியது.
பலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸை அழிக்க இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது.
ஏவுகனை தாக்குதல்
இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது வலுவடைந்துள்ள நிலையில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் பேஜர்கள், வோக்கி டோக்கிகள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி இஸ்ரேல் மீது லெபனானும், லெபனான் மீது இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள தாஹியில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைமையகம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர்
மேலும் இந்த தாக்குதல் என்பது ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah) குறிவைத்து வைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மறுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று ஹசன் நஸ்ரல்லாவுடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய தளபதிகள்
ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் படுகொலை செய்தது. இன்னும் ஹசன் நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருக்கிறார்.
இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |