ஹிஸ்புல்லா ஏவுகணைகளால் இஸ்ரேல் தலைநகரில் பதற்றம்
லெபனானில் (Lebanon) இயங்கி வரும் ஹிஸ்புல்லா (Hezbollah) கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் (Israel) ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை தடுமாறிய ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் கமாண்டர் இறந்தாலும் அதனால் தங்களின் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழியும் என்று எண்ணி விடக்கூடாது என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா (Hassan Nasrallah) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள ஹிஸ்புல்லா இதுவரை வடக்கு இஸ்ரேல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் (Tel Aviv-Yafo) மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பேலிஸ்ட்டிக் தாக்குதலை ஆன்டி- பேலிஸ்டிக் மிசைல்கள் மூலம் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பதற்றமான சூழல்
டெல் அவிவ் நகரின் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த பேஜர் தாக்குதல்களுக்கும் தங்களது தளபதிகளைக் குறிவைத்துக் கொன்றதற்கும் மோசாட்டை பழிதீர்க்க இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலால் தலைநகர் டெல் அவிவில் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |