ஹவாய் தீவில் பரவும் காட்டுத் தீ - 53 பேர் பலி
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவும் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மௌவ்வி தீவில் ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவு

ஹவாய் மாநில வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய இயற்கை பேரழிவாக இந்த காட்டுத் தீ அனர்த்தம் பதிவாகியுள்ளதாக ஆளுநர் ஜோஸ் கிறீன் கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க லஹைய்னா கடலோர நகரத்தின் 80 வீதமான பகுதி அழிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நகரில் சுற்றுலாவிற்காக சென்றவர்கள், தீ பரவலில் இருந்து தப்பிக்கும் வகையில் கடலுக்குள் இறங்கியதுடன், பல மணிநேரம் கடலுக்குள் இருக்க நேரிட்டுள்ளது.
ஹவாய் தீவிற்கு சுற்றுலா சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், 11 ஆயிரம் பேர் வரை மின்சாரம் இன்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர மீட்பு நிதி

மௌவ்வி தீவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிவருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஹவாய் தீவில் காட்டுத் தீ பரவிவருவதுடன், அண்மையில் தீவை கடந்த டோறா சுறாவளியால் ஏற்பட்ட கடும் காற்றானது தீ பரவலை மேலும் தீவிரப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ பரவலானது, பாரிய அனர்த்தம் என பிரகடனம் செய்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவசர மீட்பு நிதியை விடுக்குமாறும் பணித்துள்ளார்.