சுகாதாரத் துறையில் அதிகரித்துவரும் பிரச்சினைகள் - ரணில் வழங்கிய முக்கிய தீர்மானங்கள்
இன்று (14) அதிபர் ரணில் விக்ரமசிங்க சுகாதாரத் துறை அதிகாரிகளிற்கு மூன்று முக்கிய தீர்மானங்களை வெளியிட்டார்.
சுகாதாரத் துறையில் தற்காலத்தில் அதிகரித்துவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் சந்திப்பின் போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க, முக்கியமான மூன்று முடிவுகளை முன்வைத்தார் அவையாவன,
- மருந்துகளை பெற்றுக்கொள்வதில் உள்ள தாமதம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
- கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களையும் தாதியராக இணைத்துக் கொள்ளலாம்.
- வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லை 63 ஆக அதிகரிப்பு.
பயிற்சி பெற்ற தாதியர்கள்
குறித்த முடிவுகள் தொடர்பாக மேலும் விளக்கமளித்த அதிபர், சுகாதார அமைச்சினால் நடாத்தப்படும் இணையத்தளங்களில் வைத்தியசாலைகளில் நிலுவையிலுள்ள மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ள வேண்டிய மருந்துகளின் அளவுகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் வைத்திய சாலைகளிற்கிடையிலான மருந்து பரிமாற்றங்களையும் குறித்த அதிகாரிகளால் நிர்வகிக்க கூடியவாறு சேவைகளை உருவாக்க வேண்டும் என கூறினார்.
அது மட்டுமல்லாது, தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் கலைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களையும் பயிற்சிக்கு உட்படுத்தக் கூடிய வகையில் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் என அதிபர் தெரிவித்திருந்தார்.
இதன் மூலமாக பயிற்சி பெற்ற தாதியர்கள் அதிகமானோரை சேவையில் இணைத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கமளித்து இருந்தார்.
அடுத்து, மருத்துவர்களின் ஓய்வு வயதினை 63 வருடங்களாக அதிகரிக்கும் படி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த அறிக்கையின் படி, அதனை இறுதிவரை 63 ஆக நீட்டிக்குமாறு அதிபர் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.