சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!!
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
இதன்காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானங்கள், இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், நாளை முதல் 2 நாட்களுக்கு, மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுவர் மற்றும் மகளிர் வைத்தியசாலைகள், புற்றுநோய், மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் தடையின்றி சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
