நாடளாவிய ரீதியில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்
நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பானது, இன்று(13) காலை 6 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
அந்தவகையில், சுகாதார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுகாதார பணியாளர்களின் போராட்டம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கத்தின் வடமாகாண தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் கருத்து தெரிவிக்கையில்,,, இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போது எமது கோரிக்கையை அவர்கள் உதாசீனம் செய்ததன் காரணத்தினால் நாங்கள் இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை 6.30 மணி முதல் நாடு முழுவதும் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைச் சங்கம் உள்ளடங்களாக 72 தொழில் சங்கங்களின் தலைவர்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
இப் போராட்டமானது அப்பாவி மக்களுக்கு எதிரானது இல்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்களும் வருந்துகின்றோம். எங்களை அரசாங்கம் அரச சேவையாளர்கள் என கருதாத நிலையிலே இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியாவிலும் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள் என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர் கொண்டு இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.
இதேவேளை தூர இடங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |