மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்களுக்கிடையே வாக்குவாதம்!
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நேற்று (13-08-2026) நடைபெற்றபோது, மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறும் மின்சாரத் தடைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா ? என ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
அபிவிருத்திக் குழு
இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும் அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் தீவிரமடைந்ததுடன் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும் சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

