வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (18.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது (18) நாட்டின் வடகிழக்கில் உள்ளது. மேலும் படிப்படியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை
ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறி வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நான்கு வான் கதவுகள் திறப்பு
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கந்தளாய் குளத்திற்கு வந்து சேரும் நீரை கட்டுப்படுத்துவதற்காக கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் நான்கு வான் கதவுகளை இன்று திறந்து வைத்தார்.
தற்போது குளத்திலுள்ள நீர்மட்டத்தை குறைக்கும் வகையிலும், கந்தளாய் குளத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் குளத்தின் 10 மதகுகளில் நான்கு மதகுகள் தலா நான்கு அடி திறக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்பட்டதாகவும், அதில் இருந்து வெளியேறும் தண்ணீரின் கொள்ளளவு வினாடிக்கு 700 கன அடி என்றும் நீர்பாசன பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |