ஹெலம்ப ரமேஷ் கைது - மித்தெனியவில் தலைதூக்கும் குற்றச்செயல்கள்
மித்தெனிய, தோரக்கொலயா பகுதியில் அண்மையில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கிய “ஹெலம்ப ரமேஷ்” என்ற நபர் தங்காலை குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றுக்குள் நுழைந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வீரகெட்டிய, பொல்தவானேவில் வசிக்கும் 36 வயதான, ஒரு பிள்ளையின் தந்தை என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பெறுமதியான பொருட்கள்
கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி, சந்தேகநபர் சிகரெட் வாங்குவதற்காக வீரகெட்டிய, பெதிகமவில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அக்கடையின் மேல் மாடியில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு கோடியே ஐம்பது இலட்சத்து எண்பதாயிரம் (15,280,000) ரூபா பெறுமதியான தங்க நகைகள், பணம் மற்றும் ஏனைய பொருட்களைக் கொள்ளையடித்துள்ளமை விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் நேற்று (16.10.2025) வீரகெட்டிய, பெதிகம பிரதேசத்தில் வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபரின் சட்டைப் பையில் இருந்து 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், அவர் வந்ததாகக் கூறப்படும் வேனில் இருந்து 9 மில்லிமீட்டர் ரக 13 துப்பாக்கி ரவைகளும், T56 ரக 2 துப்பாக்கி ரவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துவிச்சக்கர வண்டி, திருடிய பொருட்களை விற்று வாங்கப்பட்ட 21 இலட்சம் ரூபா பெறுமதியான வேன், பணமாக 17.5 இலட்சம் ரூபா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மித்தெனிய இரட்டைக் கொலை
இந்தச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் திருட்டு மற்றும் ஹெரோயின் தொடர்புடைய பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் கடந்த ஜூன் மாதம் மித்தெனிய, தோரக்கொலயா பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹக்மனையில் நடந்த விழா ஒன்றில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அவ்வாறு வழங்கியதாகவும், அதற்குப் பதிலாக 'தெம்பிலி லஹிரு' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியிடம் இருந்து 5 கிராம் போதைப்பொருள் கிடைத்ததாக இதன்போது தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
