புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்….
தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நியூசிலாந்து
நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன.
நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிருந்தன.
திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான் கலம் ஒன்று தமிழீழ தேசியக்கொடியை தாங்கியபடி வானில் பறந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
அவுஸ்திரேலியாவின் செனட் சபையின் பசுமைக்கட்சி உறுப்பினர் டேவிட்சூ பிறிட்ஜ் ஏற்கவே செனட்டில் மாவீரர் நாளை கௌரவித்து உரையாற்றிய போது தமிழர்களின் நாட்காட்டியில் மாவீரர் நாள் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றெனவும் கண்ணியம் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியா
பிரித்தானியாவை பொறுத்தவரை லண்டன் எக்ஸல்மண்டபம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள உலகத்தமிழர் வரலாற்றுமையம் ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றன இதேநேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தீக்குளித்து தியாச்சாவடைந்த ஈகைபேரொளி முருகதாசனின் வித்துடல் உள்ள கல்லறையிலும் அஞ்சலி இடம்பெற்றிருந்தது .
அதேபோல ஸ்கொட்லாந்து உட்பட்ட ஏனைய முக்கிய இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
பிரித்தானியாவில் அரசியல் கட்சிகளின் பிரபலங்களும் நினைவேந்தல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் ஆளும் தொழிற்கட்சியின் முன்னாள் நிழல் நிதியமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் மக்டொனால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் ஆகியோர் தமது செய்திகளை காணொளியில் வெளியிட்டனர்.
அதேபோல தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ்பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிடலை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டிருந்தார்.
காணொளி - https://youtu.be/cpRrbAbCruM

பிரான்ஸ்
பிரான்சில் இன்று பல நகரங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
முதன்மை நிகழ்வு தலைநகர் பரிசின் புறநகரப் பகுதியான லே போர்த் மார்லி பகுதியில் உள்ள பிரமிட் பெரு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதேநேரத்தில் கப்டன் கஜன், லெப்.கேர்ணல் நாதன் மற்றும் கேர்ணல் பரிதி ஆகியோரின் வித்துடல்கள் உள்ள பந்தன் கல்லறை தோட்டத்தில் மதியம் 12.35 க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டிருந்தது.
இதனைவிட போர்தோ, நீஸ், லியோன் , தூலூஸ் , ஜியான் உட்பட்ட பல முக்கிய நகரங்களிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.
இதேபோல சுவிற்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி , டென்மார்க் , நோர்வே மற்றும் சுவிடன் உட்பட்ட நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
புலம்பெயர் நாடுகளில் அதிகமான ஈழத்தமிழ் மக்கள் வசிக்கும் கனடாவிலும் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |