அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் - அநுர உத்தரவு
புதிய இணைப்பு
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த விடயம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் தொடர்பில் ஆராய, இன்று (27.11.2025) முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள்
தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்குமாறு தெரிவித்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்க தலையிடுவதற்கு, வரவுசெலவுத்திட்ட விவாதங்களும் நாடாளுமன்ற செயற்பாடுகளும் தடையாக இருப்பதால், இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் மேலும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பு
பிரதானமாக மக்களின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரம் உள்ளிட்ட நிவாரண சேவைகளை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், உயர்தரப் பரீட்சையை நடத்துவது மற்றும் தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
அனர்த்த நிலைமை காரணமாக நிவாரண முகாம்களில் உள்ள மக்கள், வீடுகளில் சிக்கியிருப்பவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும் இங்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறிமுறை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |