நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கிய ஆவணம் -நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேரணை மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பிக்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து, தான் பெப்ரவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும், உரிய வீசாக்களை பெற்றுக்கொள்வதற்கு கடவுச்சீட்டு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
தனது கோரிக்கையை பரிசீலித்து தனது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த, கோரிக்கையை ஏற்று அவரது கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்க உத்தரவிட்டார்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை, விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் சாட்சியங்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சம்பிக்க ரணவக்க மீது 2016ஆம் ஆண்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக எம்.பி.க்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.