கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாத்துறை வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த வருடத்தில் (2024) பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய கடந்த ஆண்டில் 20 இலட்சத்து 53 ஆயிரத்து 465 சுற்றுலாப் யணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்மூலம் இலங்கை சுற்றுலாத்துறை மேலும் ஒரு மைல்கல் சாதனையை அடைந்துள்ளதுடன் வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 38.07 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நாட்டிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 30 இலட்சம் பயணிகள் வருகை தருவர் என்ற இலக்கை கொண்டிருந்த போதிலும் பயங்கரவாத தாக்குதலால் அந்த நம்பிக்கை முற்றாக சிதைக்கப்பட்டதாக சுற்றுலாத் துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து எதிர்பார்த்த எண்ணிக்கையை விட கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக சுற்றுலா தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
எனினும், மாலைதீவு (Maldives) மற்றும் தாய்லாந்து (Thailand) போன்ற பிராந்திய போட்டியாளர்களை விட இலங்கையின் வருடாந்த பயணிகள் வருகை மிகவும் பின்தங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை பொறுத்த மட்டில், கடந்த ஆண்டு இந்தியாவில் (India) இருந்து நான்கு இலட்சத்து 16 ஆயிரத்து 974 வருகை தந்திருந்தனர்.
அதேபோல ரஷ்யா, இங்கிலாந்து, ஜேமனி, சீனா, மாலைதீவு, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |