இந்தியாவின் நிவாரண நிதி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம்!
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியாவால் வழங்கப்படவுள்ள 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதித் தொகையினை இலங்கை மற்றும் இந்திய உயரதிகாரிகள் அடங்கிய ஒன்றிணைந்த குழுவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
குறித்த ஒன்றிணைந்த குழு செயல்படுத்தப்பட வேண்டிய மறுசீரமைப்புத் திட்டங்களைத் தீர்மானிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் இந்திய கடன் வசதியின் கீழ் கொள்முதல் செய்யும் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்த தேவையான இந்திய தொழிலாளர்களை நாட்டில் பணியமர்த்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள்
அதன்படி, இதன் தொடர்புடைய மறுசீரமைப்புத் திட்டங்கள் ஐந்து முக்கிய பகுதிகளின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளதுடன், மேலும் அவை மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது மாதங்கள் என்ற மூன்று காலகட்டங்களில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து துறைகள் தொடர்பான மறுசீரமைப்பு பணிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க இந்திய நிபுணர் குழுக்கள் நாட்டிற்கு வருகைத் தரவுள்ளன.
இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மதிப்பாய்வு செய்யப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். இது தொடர்பான முதல் கலந்துரையாடல் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளது, இதன்போது முன்னுரிமை திட்டங்களின் பட்டியல் அடையாளம் காணப்படும் என குறித்த செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையைப் போலவே இலங்கையில் ஒரு விரைவான பேரிடர் மீட்புப் படையை நிறுவுவதற்கு உதவ இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்குத் தேவையான நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியையும் இந்தியா வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்தபோது, நிவாரண நிதி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |