பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ள பொதுச் செயலாளர்: உறுதியான நிலைப்பாட்டில் ஹிருணிகா
நான் பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ள போதிலும், இதுவரை அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
எனது பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளர் ஏற்காவிட்டாலும், தொடர்ந்தும் இந்த பதவிகளை வகிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள (Colombo) ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல்
சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய மகளிர் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்தேன். அந்த அனைத்து காரணிகளையும் என்னால் ஊடகங்களுக்கு கூற முடியாது. நான் பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ள போதிலும், இதுவரை அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
கட்சியையோ கட்சி தலைவரையோ அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் நோக்கத்தில் நான் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. பொதுத் தேர்தலில் நான் எனக்காக பாடுபட வேண்டியுள்ளது.
எனவே தான் ஏனைய பதவிகளை துறக்க தீர்மானித்தேன். பொதுச் செயலாளர் எனது கடிதத்தை ஏற்காவிட்டாலும், தொடர்ந்தும் இந்த பதவிகளை வகிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன். கட்சி தலைவர் எடுக்கும் தீர்மானங்களை பொதுச் செயலாளர் நடைமுறைப்படுத்துவார்.
அரசியலில் ஈடுபடும் ஒரு பெண்
இவர்களுக்கு அப்பால் எதுவும் இடம்பெறாது. கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானத்தையும் நான் எடுக்கப் போவதில்லை. மிகவும் பாடுபட்டு கட்டியெழுப்பிய இந்த கட்சியை என்றும் விட்டுச் செல்ல முடியாது.
நான் கட்சிக்குள் அரசியலில் ஈடுபடும் ஒரு பெண், ஜலனி பிரேமதாச, சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) மனைவியாவார். அவர் ஒரு மனைவியாகவும், தாயாகவும் மாத்திரமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். மாறாக கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர கடந்த 13 ஆம் திகதி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |