தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிசாலினி வழக்கு விவகாரம்! சட்டத்தரணி வெளியிட்ட மற்றொரு தகவல்
டயகம சிறுமி ஹிசாலினி உயிரிழந்து விட்டதால் அவர் மீது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என பிரபல சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு வைத்தியரிடம் தான் தீ வைத்துக் கொண்டதாக மரண வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அதனை சாட்சியாக வைத்து வழக்கில் இது ஒரு தற்கொலை என்றே கருதப்படும் எனவும் குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகங்கள் ஹிசாலினியை 15 வயது சிறுமி என்று கூறுகின்ற போதும் அவர் 16 வயது பூர்த்தி செய்த யுவதி என சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி தீக்காயங்களுடன் மரணமடைந்துள்ள சிறுமி ஹிசாலினியின் இரண்டாவது மரண பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மரண பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விசேட மருத்துவக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.