இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிபர் பதில் செயலாளராக பெண் நியமனம்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா அதிபர் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன என்பரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க இருவரும் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சாந்தனி விஜேவர்தன பதில் செயலாளராக நியமிக்கப்ட்டுள்ளார்.
வரலாற்றில் இதுவே முதல் தடவை

இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதிபரின் செயலாளர் நாடு திரும்பும் வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி சவுத்லண்ட் பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான சாந்தனி விஜேவர்தன, ருகுணு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளதோடு நெதர்லாந்தின் ஹேக் நகரில் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பட்டப்பின் படிப்பை பூர்த்தி செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவை என அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.