வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நல்லூர் ஆலய சூரசம்ஹார நிகழ்வு
பெருமளவான பக்தர்கள் புடைசூழ வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு பக்தி பூர்வமாக நடைபெற்றது.
முருகனுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த செவ்வாய்க்கிழமை (10.11.2026) ஆரம்பமாகி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு கடந்த ஆறு நாள்களாக ஆலயத்தில் விசேட பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருமுறைப் பாராயணங்கள் பக்திபூர்வமாக இடம்பெற்று வந்தன.
ஆலய வெளிவீதியில் பெருமளவு அடியவர்கள்
கந்தசஷ்டி விரதத்தின் முக்கிய நாளான நேற்று கந்தப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து ஆட்கொள்ளும் நிகழ்வைக் காண்பதற்காக வருகை தந்திருந்த பெருமளவு அடியவர்கள் ஆலய வெளிவீதியில் திரண்டிருந்தனர்.

நேற்று மாலை ஆலய வெளிவீதியில் எழுந்தருளிய முருகப்பெருமான், பல்வேறு வடிவங்களில் வந்த சூரபத்மனுடன் போரிட்டு இறுதியில் அவனை வதம் செய்து ஆட்கொள்ளும் காட்சி, பக்தர்களின் “அரோகரா" கோஷம் விண்ணதிர மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.
கஜ முகத்துடனும், சிங்க முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்த பிறகு சுயரூபத்தில் வந்த சூரனை முருகன் தனது வேலால் வதம் செய்தார். பிறகு சூரனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.
கந்தசஷ்டி விரதத்தின் நிறைவாக இன்று திங்கட்கிழமை ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |