யாழில் விபத்து:தந்தை-மகன் உயிரிழப்பு:ஆள் மாறாட்டம் செய்த சாரதி கைது
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி, குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தின்போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என காவல்துறையில் சரணடைந்த நபர் மதுபோதையில் இருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும், மகனையும் கே.டி.எச் வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
போதையில் சாரதி
சாவகச்சேரி மத்துவில் தெற்கை சேர்ந்த செல்வத்துரை செல்வராஜ் (வயது 51) அவரது மகனான செல்வராஜ் டிசாந்த் (வயது 09) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள், வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில், வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அன்றைய தினம் இரவே மட்டுவிலை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தானே வாகன சாரதி என காவல்துறையினரிடம் சரணடைந்த நிலையில் , அவரை கைது செய்து, சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், முதல்கட்டமாக மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் எவ்வித விசாரணைகளோ இன்றி வாகனத்தை காவல்துறையினர் ஏன் அப்புறப்படுத்தினர் என அங்கு கூடியிருந்தவர்கள் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.
ஆள் மாறாட்டம்
இவ்வாறான நிலையில் , விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், விபத்து இடம்பெற்ற வேளை வாகனத்தினுள் இருந்த ஐவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது ஐவரில் ஒருவரே வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்தினார் எனவும், விபத்து நடைபெற்ற நேரத்தில் சரணடைந்தவர் சாரதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சாரதி ஆள் மாறாட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |