வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..!
இலங்கையில் தற்போது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் எதுவென்றால் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் அனுர மனதுங்க என்பவரை அதிபர் ரணில் கடுமையாக சாடியதும் அதனையடுத்து மறுநாள் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியதும்தான்.
குறிப்பாக தமிழர் தாயகப்பகுதியில் தொல்பொருள் உள்ள இடங்கள் என தெரிவித்து தமிழரின் வாழ்வையே சிதைக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் யுத்தத்தின் பின்னர் பகிரங்கமாகவே ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடங்கியது.இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.
ஆக்கிரமிக்கப்படும் தமிழர் நிலங்கள்
தமிழரின் வாழ்விடங்கள்,மத தலங்கள்,பொது இடங்கள்,விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் தரைகள் என அனைத்தையும் அது விட்டுவைக்கவில்லை.இதனால் தமிழர்கள் ஏதாவது ஒரு முயற்சியை முன்னெடுக்கவேண்டுமாக இருந்தால் அது தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிலைக்கு செல்லுமளவுக்கு நிலைமை பாரதூரமாகியது.
சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஆட்டுவிக்கும் மறைகரம்
ஒரு படித்தவர்,கல்விமான் அந்தப்பதவியில் இருப்பார் என்றால் ஒருவிடயத்தை செய்யும் முன்னர் அவர் அதனை கவனமாக ஆராய்ந்த பின்னரேயே மேற்கொள்ளவேண்டும்.ஆனால் அவரை ஆட்டுவிக்கும் ஒரு மறைகரம் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அதனையே சாணக்கியனும்,சுமந்திரனும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதுதான் தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.வடக்கு கிழக்கில் இடம் பெறும் சட்டவிரோத காணி அபகரிப்புகள் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமைய நடைபெறுவதாகவும், இதனடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமெனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இப்போது புரிகிறதா எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோகச் செய்யும் சிங்கள தலைவர்களின் முயற்சி. இந்த விதுர விக்கிரம நாயக்க யாரென்றால் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் புதல்வர்.தமிழர் என்றால் எண்ணெயாக கொதிப்பவர்தான் அந்த ரட்ணசிறி விக்கிமநாயக்க.அவரின் வழித்தோன்றலுக்கு தமிழர்களை கண்ணில் காட்டலாமா?
வெடுக்குநாறிமலையில்,குருந்தூர் மலையில், கிண்ணியாவில்,கிளிநொச்சி உருத்திரபுரத்தில், மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் என நீண்டு செல்கிறது தொல்பொருள் திணைக்களத்தின் மத ஆக்கிரமிப்பு. அதேபோன்று தமிழரின் விவசாய நிலங்கள், எல்லைப்புற குடியேற்றங்கள் என விரிவடைந்து செல்கிறது அதன் கால்கள்.
வரலாற்றை எனக்கு கற்பிக்க முயலவேண்டாம்
வரலாற்றை எனக்கு கற்பிக்க முயலவேண்டாம் என ரணில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை பாரத்து கூறுகின்றார்.அதனைத்தான் தமிழர்களும் தமது வாழ்விடங்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் தொல்பொருள் திணைக்களத்தை பார்த்து கூறுவது என்னவென்றால் இது தமிழர்களின் பூர்வீக இடங்கள்.இதனை ஆக்கிரமிக்காதீர்கள் என்பதுதான்.இதனை ரணில் வாரத்தையில் சொன்னால் வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!
