விடுதலைப் புலிகளை நேசித்த ஈழ அன்னையர்களின் குறியீடுதான் அன்னை பூபதி
எல்லா உயிரினங்களிலும் தாய் மகத்தான சக்தியாக மாபெரும் உன்னதமாக கருதப்படுகிறாள். பிராணிகளில்கூட தாய்மையின் மகத்துவத்துவம் உணர்த்தும் காட்சிகளை டிஜிட்டல் யுகத்தில் பார்க்கிறோம்.
அன்னை இந்தப் பிபஞ்சத்தையும் வாழ்வையும் உருவாக்குபவள். ஈழ விடுதலைப் போராட்டக் களத்திலும் அன்னையர்கள் மகத்தான சக்தியாகவே கருதப்படுகின்றனர்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈரமான அன்னையர்களும் உண்டு, வீரமான அன்னையர்களும் உண்டு. அவர்கள் எல்லா வகையிலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை தாங்கியிருந்தார்கள்.
ஈழ மண்ணையும் ஈழ விடுதலையையும் நேசித்த போராளிகளை தங்கள் உயிரிலும் மேலான உத்தமப் பிள்ளைகளாக நேசித்து அன்பு பாராட்டினார்கள்.
விடுதலைப் போராட்ட காலத்தில் போராளிகளுக்கு உணவைக் கொடுத்து அன்பையும் கரிசனையையும் செலுத்திய பல அன்னையர்களை பார்த்திருக்கிறோம்.
ஈழ நிலத்தின் எங்கோ ஒரு இடத்தில் ஒரு போராளியின் தாய் இருக்கும் போது எங்கோ ஒரு நிலத்தில் இருக்கும் இன்னொரு தாய், அந்தப் போராளிக்கு பெற்ற அன்னைபோல் அளித்த அன்பும் ஆறுதலும் அடைக்கலமும் ஈழ விடுதலையின் உன்னத பக்கங்களாகும்.
போராளிகளைக் காத்த அன்னையர்கள்
போராளிகள் தங்கள் வீடுகளுக்கு வந்திருக்கும் போது இராணுவமும் அங்கே போராளிகளைத் தேடி வர, அதனை வீரமாகச் சமாளித்து பல போராளிகளைக் காப்பாற்றிய அன்னையர்களின் தேசம் இது.
இன்றைக்கு ஈழ நிலத்தில் அன்னையர்கள் நடாத்துகின்ற போராட்டத்திற்கு பெரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள்தான் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் ஈழ விடுதலைக்காக அன்றைக்கு இளைஞர்களும் யுவதிகளும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், அன்னைபூபதி அவர்கள் தியாக வழியில், அகிம்சைப் பாதையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக தன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஈழப் போராளிகளுக்காக ஒரு அன்னையாக ஈழ அன்னையர்களின் குறியீடாக அவர் முன்னெடுத்த போராட்டம், ஈழ விடுதலையின் அன்னையர்களின் பங்களிப்பையும் அதன் விரிந்த பக்கங்களையும் காலத்தின் முன் நிறுத்துகிறது.
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாடு எத்தகைய நீதியில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் அன்னையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தெருவில் வீழ்ந்து புரண்டழும் இந்த தாய்மாரைப் பார்த்தும் இலங்கை அரசும் உலகமும் நீதியை வழங்காமல் மௌனித்து அநீதி காக்கிறது.
அன்னையர்களின் கண்ணீருக்கு பதில் அளிக்காதிருக்கும் மனிதாபிமானமற்ற கொடிய முகத்தையே நாம் உணரவேண்டியுள்ளது. ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
அர்ஜன்டீனா அன்னையர்கள்
அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று.
ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது. ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது.
அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர்.
சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது.
அன்னைபூபதி எனும் ஈழத் தாய்
1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய்.
ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.
இவர் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர்.
இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார்.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை. அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
1988இல் ஜனவரி 4ஆம் திகதி திருகோணமலையிலும் பெப்ரவரி 10ஆம் திகதி கொழும்பிலும் அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்த அன்னையர் முன்னணி தீர்மானித்தது.
மார்ச் 19 துவங்கிய போராட்டம்
சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார்.
பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது.
இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" என்று கடிதம் எழுதி வைத்தார்.
நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார்.
இந்திய அரசின் கொடுமுகம்
இந்திய நாட்டின் அகிம்சை முகத்தை திலீபன் என்ற போராளி கிழித்தெரிந்த நிலையில் அன்னை பூபதியின் அறப்போராட்டம் ஊடாக ஈழப் பொதுமக்களாலும் இந்திய அரசின் அகிம்சை முகம் கிழிக்கப்பட்டது.
அன்னைபூபதி ஈழத் தமிழ் மக்களின் அறப்போராட்டத்தின் முகம். இந்திய படைகளின் அராஜகங்களுக்கு எதிரான அற வழி ஆயுதம். ஜனநாயக வழிப் போராட்டத்தின் அடையாளம்.
இன்றைக்கு ஈழத்தில் தாய்மார்கள் தெருத் தெருவாக வீழ்ந்து புரண்டு போராட்டத்தில் ஈடுபடும்போது அன்னை பூபதியே நினைவுக்கு வருகிறார்.
இன்றைக்கு எங்கள் தெருவெல்லாம் அன்னை பூபதிகள் உள்ளனர். அன்னை பூபதி இந்திய அரசின் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்தவர். போரை நிறுத்தி, தம் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே அவரிடமிருந்தது.
அதைப்போலவே இன்று எங்கள் தெருவெங்கும் அன்னையர்கள் போராடுவதும் பிள்ளைகளுக்காகவே. காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அவர்களின் உண்மை நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும் என்று போராடுகின்றனர்.
தம்மை உருக்கி, தம்மை அழித்து மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கும் அன்னை பூபதியின் போராட்டத்திற்கும் மிக நெருக்கம் உண்டு.
எங்கள் அன்னையர்கள் - அன்னை பூபதிகள் நடத்தும் போராட்டங்கள் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்குமுறை முகத்தை அம்பலம் செய்கிறது.
தாய் பூமியாகவும் தெய்வமாகவும் கருதப்படுபவள். அவளின் சினத்திற்கும் சீற்றத்திற்கும் கண்ணீருக்கும் வலிமையுண்டு.
எங்கள் அன்னையர்கள், அன்னைபூபதிகளாய் வயிற்றில் நெருப்பை நிறைத்திருக்கையில் இத்தீவு நெருக்கடியிலும் துயரத்திலும் புகைந்தபடி இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 22 March, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 வாரங்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்