கிழக்கில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் : ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal Ratnasekera) தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளதன் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு பணித்துள்ளார்.
இதற்கமைய நேற்று (09) மட்டக்களப்பு நகரில் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றிய மாகாண மட்டத்திலான விசேட கருத்தரங்கு புதிய ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது.
எய்ட்ஸ் நோயை ஒழித்தல்
இந்த விசேட கருத்தரங்கில் திருகோணமலை மாவட்டத்தில் 26 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 25 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 பேருமாக 67 பேருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுகாதார அமைச்சு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை ஒழித்துக் கட்டுவதற்கு தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான திட்டமிடல்கள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் திணைக்களம் மாத்திரமன்றி ஏனைய அரசு திணைக்களின் ஒத்துழைப்பை பெற்று, இந்தத்திட்டத்தை விரிவாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இது தவிர எய்ட்ஸ் நோயை கிழக்கு மாகாணத்தில் ஒழித்துக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டன.
பூரண ஒத்துழைப்பு
இந்த கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்திய அதிகாரிகள், எய்ட்ஸ் நோய் தடுப்பு சிகிச்சையுடன் தொடர்பட்ட வைத்திய அதிகாரிகள், ஏனைய அரசு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் தேசிய இளைஞர்களும் மன்றத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் ஆளுநர் ஜயந்த ரத்னசேகர கருத்து வெளியிடுகையில்,
“எய்ட்ஸ் நோயை கிழக்கு மாகாணத்தில் ஒழித்துக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளுக்கு சகல அரச திணைக்களங்களின் அதிகாரிகள் வைத்திய சேவையாளர்கள் மற்றும் சுகாதார சேவை திணைக்களத்தின் பணியாளர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்க வேண்டும். எம்மாலான முழு ஒத்துழைப்பும் இதற்கு வழங்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் சுகாதார சேவை திணைக்களத்தின் பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதற்காக நாம் எடுக்க இருக்கின்ற நடவடிக்கைகளுக்கு சகல அரச திணைக்கள அதிகாரிகள், வைத்திய சேவையாளர்கள் மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணியாளர்கள் பூரண ஒத்துழைப்புகளை நல்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |