அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக தேர்தல் சட்டத்தின் விதிகளின்படி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) நிறுவனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (02) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது அவசியமானது எனவும் தெரிவித்தார்.
ஆணைக்குழு வெளியிட்ட சுற்றறிக்கை
அரச அதிகாரிகளுக்கு, வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தூரத்தைப் பொறுத்து, நிறுவனத் தலைவர் தீர்மானிக்கும் போதுமான கால அவகாசத்துடன், குறைந்தபட்சம் 2 மணி நேர விடுமுறை வழங்குவது அவசியம் என தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தனியார் துறைக்கு விடுமுறை வழங்குவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீற்றர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீற்றர் வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்படல் வேண்டும்.
100 முதல் 150 கிலோமீற்றர் வரை இருந்தால் ஒன்றரை நாள் 150 கிலோமீற்றருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டைகள்
எனினும், சில வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தூரத்தைப் பொறுத்து இதற்கு மேல் கூடுதல் நாட்கள் விடுமுறை தேவைப்படலாம் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நாளை (03) நள்ளிரவு முதல் முடிவுக்கு வரும் எனவும் மே 03 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதிக் காலமாக கருதப்படுகிறது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி முடிவடைந்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், தமது பிரதேசத்தில் உள்ள உப தபால் அலுவலகத்திற்கு சென்று அந்த அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
