மாவீரர் வாரத்தையொட்டி மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிப்பு(படங்கள்)
தமிழ் மக்களுக்கான உரிமை போரில் தமது உயிர்களை உவந்தளித்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் வாரம் வருடம்தோறும் கார்த்திகை மாதம் 21ம் திகதி முதல் 27 ம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுவதோடு கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுவது வழமை.
இவ்வாறான நிலையில் மாவீரர் வாரத்தில் மாவீரர்களது பெற்றோர்கள் வருடம்தோறும் கௌரவிக்கப்படுவார்கள்.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழபோராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவப் படுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி
குறித்த நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கும் விதமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மாவீரரின் பெற்றோரினால் பொது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மரணித்த மாவீரர்களின் நினைவாக ஒவ்வொரு பெற்றோருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அதே நேரம் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவீரர் பெற்றோர்களுக்கு உலர் உணவு பொதிகளும் ஏற்பாட்டு குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர்கள்,முன்னால் போராளிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கௌரவிப்பு நிகழ்வு
அதேவேளை, தமிழ்நிலம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று (22-11-22) சிறப்பாக நடைபெற்றது.
முள்ளியவளை மத்தி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முள்ளியவளை கிழக்கு மத்தி வடக்கு போன்ற பகுதிகளை சேர்ந்த ஒரு தொகுதி மாவீரர் பெற்றோர்கள் இதன்போது மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான வகையில் இந்த கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது மாவீரர்களுடைய பெற்றோர்கள் அழைத்துவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவாக திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் குடும்பங்களுக்கு உதவி
தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன இதன்போது 80 வரையான மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் தென்னங்கன்று வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லோகேஸ்வரன் தமிழ் நில மக்கள் அமைப்பின் தலைவர் வினோகரன் செயளாலர் அமிர்தசீலன். மற்றும் அமைப்பின் ஊடக பேச்சாளர் போசன் அமைப்பின் உறுப்பினர்கள் முள்ளியவளை மாதர் கிராம அவிபிருத்திசங்கத்தின் தலைமைகள் சமுக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |