ராஜபக்சர்களுக்கெதிரான எதிர்க்கட்சியினரின் கையெழுத்து வேட்டை
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தியினர் கையெழுத்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“நீதிக்கான மக்கள் வாக்கெடுப்பு” எனும் தலைப்பில் இந்த கையெழுத்து போராட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களை பதிவிட்டனர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்கள் காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும் அதனை திசை திருப்பும் முயற்சிகளில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், நீதிமன்ற தீர்ப்புக்கு தவறான மொழி பெயர்ப்புக்களையும் வழங்க அவர் முயற்சிப்பதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு சரியானது என்பதை நாட்டு மக்களும் உறுதிபடுத்த வேண்டுமென கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள்
இதன்படி, இன்று கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஜிபர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மக்களின் வரிப்பணத்தை கொண்டு ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இதன் போது முஜிபர் ரஹ்மான் கோரியுள்ளார்.
கையெழுத்து பிரச்சாரம்
இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, எதிர்கால சந்ததியினரை பாதிப்படைய செய்தவர்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்கப்பட கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுமெனவும் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |