வெறும் 100 ரூபாவுக்காக சிறுவன் மீது பயங்கர தாக்குதல்
சிறுவன் மீது கொலைவெறி தாக்குதல்
வெறும் 100 ரூபாவுக்காக சிறுவன் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் ஏழு மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவனும் காப்பாற்றப்பட்டுள்ளான்.
கந்தகெட்டிய - களுகஹகந்துர, வெந்தேசியாய கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தந்தையின் கைபேசிக்கு மீள்நிரப்பு அட்டை ஒன்றை வாங்குவதற்காக நேற்றுமாலை குறித்த சிறுவன் கையில் 100 ரூபாயுடன் கடையொன்றுக்கு சென்றுள்ளான்.
பலத்த வெட்டுக்காயங்கள்
இதன்போது மர்மநபர் சிறுவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சிறுவனின் தோற்பட்டை மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், கூரிய ஆயுதம் நுரையீரல் வரை ஊடுருவியிருந்ததாகவும், வைத்தியர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 7 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளான்.
சிறுவன் வைத்திருந்த 100 ரூபாவை கேட்டு அந்த நபர் தாக்கியிருக்கலாம் என சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
தாக்குதலை நடத்திய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கந்தகெட்டிய காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மீதும் தாக்குதல்
இதன்போது, சந்தேகநபர் காவல்துறையினர் மீதும் பிரதேசவாசிகள் மீதும் கற்களை வீசித் தாக்கியதாகவும், தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அவர் கல்லில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீகஹகிவுல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.