யாழ்ப்பாணத்தில் வீடற்ற மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி
யாழ்ப்பாண (Jaffna) குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் (T. B.Sarath) தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான முந்தைய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்கள் கடுமையாக விமர்சித்த அவர் 64,407 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 1,647 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவற்றில் பல வீடுகள் யானை தாக்கும் இடங்களிலும், தண்ணீர் மற்றும் வீதி வசதிகள் இல்லாத காட்டுப் பகுதிகளிலும் கட்டப்பட்டதால் மக்கள் குடியிருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறை பாதீட்டில் தோட்ட சமூக மக்களுக்காக 2,500 வீடுகள் கட்ட 5.6 பில்லியன் ரூபாயும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 5,000 வீடுகளை நிர்மாணிக்க 15 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,445 வீடுகளை நிர்மாணிக்க இந்த ஆண்டு 3.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டுமானச் செலவுகள்
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வீடொன்றுக்கு தலா 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது மற்ற பிரதேசங்களில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை விட அதிகமாகும்.

ஏனெனில் அங்கு கட்டுமானச் செலவுகள் கூடுதலாக உள்ளன. மேலும், வடக்கில் முந்தைய ஆட்சியில் சுமார் 5,000 குடும்பங்கள் வீடுகளை இழந்து, தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கான வீடுகளுக்கு அத்திவாரம் மட்டுமே போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் 1,900-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை கட்டி முடிக்கும் பணி நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |