பொதுஜன பெரமுன எப்படி ஆட்சியை கைப்பற்றியது - வெளியானது இரகசியம்
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இனங்களுக்கிடையில் குரோதத்தை பெருமளவில் தூண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டொக்டர் ஷாபி பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதான வதந்திகள் போன்ற சம்பவங்கள் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை பெரிதும் பாதித்துள்ளதாக அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு உத்தியாக இனக்குழுக்களுக்கு இடையில் குரோதத்தைத் தூண்டுவதற்குச் செயற்பட்டது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளக்கினார்.
கடந்த காலங்களில் சந்தர்ப்பவாத மற்றும் இனவாத அரசியல்வாதிகள் நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றதுடன், இனவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை தான் வன்மையாக எதிர்ப்பதாக அவர் வலியுறுத்தினார்.
இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் இலங்கையர்கள் என்றும், தானோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ ஒருபோதும் மக்களை அவர்களின் இனத்தின் அடிப்படையில் பிரிக்கவோ பாகுபாடு காட்டவோ இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் சகல பிரஜைகளுக்கும் நிம்மதியாக வாழும் சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மேலும் திருத்தங்களைச் செய்யாததன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்தினார்.