போரின் போதே இல்லாத பொருளாதார நெருக்கடி, இப்பொழுது எதனால்!!(காணொளி)
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக ஆளும் தரப்புகளால் சொல்லப்படுவது புலிகளுடனான போர்.
ஆனால், சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போரிட்டு கொண்டிருந்த அதே புலிகள் தான் தமிழீழ வைப்பகம் தொடங்குமளவிற்கு பொருளாதார தன்னிறைவை பெற்றிருந்தனர்.
இலங்கை அரசின் வங்கிகள் 11.42 சதவீதம் முதல் 33.6 சதவீதம் வரை வட்டி வசூலித்த நேரத்தில் விடுதலைப்புலிகளின் நடைமுறை அரசு அமைத்த தமிழீழ வைப்பகம் 9 சதவீதம் முதல் 18 சதவீதம் தான் வட்டி விதித்தது.
இலங்கையின் இன்றைய பொருளியல் பேரழிவிற்கு முக்கிய காரணமாக அமைவது அது தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அரசியல் கொள்கைகளும் அது சார்ந்த பொருளியல் கொள்கைகளும் ஆகும்.
அனைத்து மக்களுக்குமான சம உரிமையையும் சம அந்தஸ்தையும் கொடுக்க மறுத்து தனது பேராதிக்கத்தை சிங்கள பேரினவாதம் வலுவாக திணிக்கப்படும் பொழுதும், அதற்கு எதிரான கலகக் குரலும் பிறக்கத்தான் செய்யும்.
ஆனால், வேடிக்கை என்னவென்றால், போராடிய மக்கள் கூட்டத்தால், பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்க முடியும் எனும் பொழுது அதிகார பூர்வ அரசினால் அது முடியாமல் போகிறது.
தொடர்ந்து தவறாக கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் கொள்கைகளால் முதலில் சிங்கள இளைஞர்களின் மீதான அடக்குமுறைக்கும், அதைத் தொடர்ந்து தமிழர்களின் மீதான இன ஒதுக்கலுக்கும் பெருமளவிலான பொருளாதாரம் ஆயுதங்களுக்கும் இராணுவத்திற்கும் செலவிடப்பட்டது.
குறிப்பாக இது அனைத்திற்கும் இலங்கை அரசு அண்டை நாடுகளை சார்ந்து இருந்தது தான் வேதனையானது. 2009-இல் நடத்தி முடிக்கப்பட்ட இனப்படுகொலை கூட இது முழுக்க முழுக்க இந்தியாவால் நடத்தப்பட்டது என்று பெருமையாக கூறிக்கொள்ளும் அளவிற்கு அதன் கையாளுகை அண்டை நாடுகளின் கையில் சிக்கியிருந்தது.
இது இலங்கை அரசின் கடன் சுமையை அதிகரிக்கலாயின. இது அதிகரித்து அதிகரித்து 2019 இல் செலுத்த வேண்டிய கடன் அளவு நாட்டின் மொத்த ஜி.டி.பி. யில் 46.2 சதவீதமாக அதிகரித்து விட்டிருந்தது.
அந்த கடனை அடைக்க மீண்டும் கடன் மேல் கடன் வாங்கியும், அந்நிய செலாவணி கையிருப்பில் கைவைத்ததும், பொருளாதார நெருக்கடிக்கு பணப்புழக்கத்தை அதிகரித்தால் சரியாகிவிடும் என்று அதிகளவில் பணம் அச்சடிக்கபட்டதும் இன்றைய விளைவுகளாக இருக்கின்றன.
இலங்கையின் மொத்த ஜி.டி.பி யில் 10 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாவின் மூலம் பெறப்பட்டது. மற்றும் தேயிலை ஆடை ஏற்றுமதி மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணி பெறப்படுகிறது.
மொத்த ஏற்றுமதியில் தேயிலை 17 சதவீதமும் ஆயத்த ஆடைகள் 52 சதவீதமும் இருக்கிறது. இத்தகைய பொருளாதார கட்டமைப்பு கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் முழுதாக முடக்கி போட்டுவிட்டது.
இதனால் இலங்கை அரசு பெரிதாக நம்பிக் கொண்டிருந்த TTT (TRIBLE T) பொருளாதாரமும், அயல்நாடுகளில் பணிபுரிவோரும் வேலையில்லாமல் முடங்கி போனதால் முடங்கி போன அந்நிய செலாவணியும் அதன் பொருளாதாரத்தை அதள பாதாளத்திற்குள் கொண்டு சென்றது.
இதுதொடர்பான மேலதிக விடயம் காணொளியில்...