விவசாயியை கொடூரமாக பழிவாங்கிய காட்டு யானை -இரண்டு நாட்களில் மூவர் பலி
காட்டு யானையொன்று மஹவிலச்சிய பிரதேசத்தில் விவசாயி ஒருவரைக் கொன்று, அவரது வீட்டைத் தேடிச் சென்று, சேதப்படுத்தியதோடு, அவரது நெற்பயிர்களை மிதித்தும் நாசம் செய்துள்ளதாக அநுராதபுரம், மஹாவிலச்சியவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளாச்சிய குலுபத்வெவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சத்துர சுதர்ஷன அதபத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சக விவசாயிகள் இருவருடன் நெல் வயலுக்கு சென்று கொண்டிருந்த போது, காட்டு யானை ஒன்று திடீரென வந்து விவசாயியை தாக்கி கொன்றது. அவருடன் சென்றவர்களில் ஒருவர் அருகில் உள்ள புளியமரத்தில் ஏறி உயிரைக் காப்பாற்றிக் கொண்டதுடன், மற்றையவர் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிர் தப்பியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
விவசாயியை தாக்கிய காட்டு யானை, தான் தாக்கிய இடத்திலிருந்து சுமார் அரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இவரது வயலுக்குச் சென்று நெற்பயிரைத் தின்றுள்ளது. பின்னர் அவரது வீட்டை நோக்கி ஓடிச் சென்று அவரது வீட்டின் முன் மற்றும் பின் கதவுகளை அடித்து நொறுக்கியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரலகங்வில திம்புலாகல பஹலல்லவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மொரகொல்லாகம, ரக்வான பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.
அதன்படி நேற்றும் இன்றும் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
