விசாரணையின் பிடியில் சிக்கவுள்ள இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தேசிய கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதெனவும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் செயற்பட்ட விதம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய கொள்கை முடிவுகளை எடுப்பதில் அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்தும் தேசிய நலனை நிராகரித்து அவர்கள் செயற்பட்ட விதம் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு உள்ளிட்ட இலங்கையின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய தேசியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சுகளிடமிருந்து அறிக்கைகளை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகள் மீறல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொருளாதார நிபுணர்களுடன் இணைந்து குறித்த விசாரணைகளையும் அறிக்கை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதார நெருக்கடியின் ஊடாக இலங்கை வாழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதன் விளைவாகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
