சர்வதேசத்தின் இறுக்கத்திற்குள் ரணில் - மக்களின் குரல் வளையை நசுக்க முற்படக் கூடாது; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கை மக்கள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி கொடுக்காது கைது செய்து அவர்களின் குரல் வளையை நசுக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்க கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த அறிவிப்பையும் உடனடியாக மீள எடுக்க வேண்டுமென அந்த கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய மக்களின் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாப்பதற்குமான பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை
இதனை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனமானது மனித உரிமைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படாது என சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் அவை அனைத்தும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மீறும் தொடர் செயற்பாடுகள் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தீவிரமான அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் வலுவான தீர்மானம் முக்கியமானது எனவும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
நீதி கோரிய போராட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உயர் பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்திய அடுத்த நாள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர்களை விடுவிக்குமாறு கோரி சோசலிச இளைஞர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படாவிடிலும் சட்டவிரோதமாக இளைஞர் சங்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எனக்கூறி 84 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு மேல் நீதிமன்றம் மட்டுமே பிணை வழங்க முடியும் எனவும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிறைவேற்றுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் மீனாட்சி கங்குலி மேலும் வலியுறுத்தியுள்ளார்.