மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் சட்டவிரோத எல்லை நிர்ணயம் - சுமந்திரன் குற்றச்சாட்டு
கொழும்பில் பிரகடனப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இருந்தாலும் வரலாற்று ரீதியாக 1990 ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான வலயங்கள் இருக்கின்றன என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் உயர் பாதுகாப்பு வலயத்தை வரையறுப்பது ஒரு புதிய நடைமுறையல்ல என்றும், குறைந்தது 1990ஆம் ஆண்டிலிருந்தே வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இத்தகைய சட்டவிரோத எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டமைப்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
இவ்வாறான நிலையில், சட்டவிரோத எல்லை நிர்ணயங்களை சவாலுக்குட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2003 இல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
மேலும் இந்த வழக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழமையானது. குறித்த வழக்கு டிசம்பர் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.