மக்கள் எழுச்சிக்கு தயாராகிறது கிழக்கு மாகாணம் - வடக்கு கிழக்கு பேரணிக்கு மிகப்பெரிய ஆதரவு!
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை (04.02.2023) கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணி ஒன்றினை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக சிவில் சமூக அமைப்புக்கள், மதப் பெரியார்கள், அரசியல் அமைப்புக்கள் அணி அணியாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கு பேரணி - பெப்ரவரி - 4
இந்த பேரணியானது யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு வரை செல்லவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் இருந்து ஆரம்பமாகும் இப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்து தமிழ் மக்களையும் அரசியல் கட்சியினரையும் அணி திரண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சிவில் சமூக அமைப்புகள், மதப் பெரியார்கள், தமிழ் தேசியக் கட்சிகளை சந்தித்து போராட்டத்திற்கான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிவில் சமூக அமைப்புகள் மதப் பெரியார்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அணி அணியாக வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
பேரணியின் நோக்கம்
13 வது திருத்தச் சட்டம் உள்ளிட்ட எந்த அரசியல் தீர்வையும் தமிழர்களுக்கு வழங்க கூடாது என சிங்கள பேரினவாத சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தமிழர்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கை பிரித்து தமிழ் தேசிய இனத்தை அழிக்கத் துடிக்கும் பேரினவாதிகளுக்கு தமிழர்களின் ஒற்றுமையை காட்ட வேண்டிய காலம் இது.
தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த நாளில் தமிழர்கள் தமக்கான உரிமைகளையும், அரசியல் அதிகாரத்தையும், கேட்க வேண்டிய காலம் இது.
தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்தியும் இதுவரையில் தீர்வு காணப்படாமல் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

